THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Monday, December 31, 2007

திருவெம்பாவை #16

 

திருசிற்றம்பலம் 




முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!.........(16)

பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப்பரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

மழை குறையாமல் பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும், அதன் மூலம் உயிரினங்கள் வாழும் என்பதால் பாவை நோன்பின் போது மாதம் மும்மாரி பொழிய வேண்டுவது மரபு. இப்பாடல் மழை வேண்டி பாடும் பாடல்.   

( மழை கற்குறைய பெய்தல்)

Labels: , , ,

Sunday, December 30, 2007

திருவெம்பாவை # 15



திருச்சிற்றம்பலம்



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(15)


பொருள்:கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வணங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.

Labels: , ,

திருவெம்பாவை # 14


திருச்சிற்றம்பலம்



காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!..........(14)


பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங்கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப்பாடி, அம்மறைப்பொருள ஆமாறு(-ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப்பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும்பாடி,(அவரது முழு முதன்மையையும்), முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்கலினும் நம்மை வேறுபடுத்துச் சிறப்புறவைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் ஆகியோரின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

ஆடியும் பாடியும் ஆனந்தக் கூத்தனுடன் சேர அழைக்கும் பாடல்  

Labels: , ,

Friday, December 28, 2007

திருவெம்பாவை # 13

 
திருசிற்றம்பலம்  




பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். .....(13)


எம்பெருமானுக்கும், எம் பிராட்டிக்கும்( தனித் தனியாக) பொங்கு மடுவிற்கும் சிலேடை

1. பைங்குவளைக் கார்மலரால்:
கருமையான குவளை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பிராட்டி போன்று இசைந்த மடு.(குவளைக் கண்ணி கூறன் காண்க)

செங்கமலப் பைம்போதால்:
 செந்தாமரை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பெருமான் போன்று இசைந்த மடு.( செய்யான் காண்க)

2.அங்கங் குருகினத்தால்


அங்கம் - அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு.

அங்கு அம் - அவ்விடத்தில் அழகிய குருகு இனத்தால்- பறவைக் கூட்டத்தினால் பொங்கும் மடு.

அங்கு அங்கு உருகும் இனத்தால்: அன்பின் மிகுதியால் அங்கே அங்கே உருகும் தொண்டரினத்தால் எங்கோனும், எம்பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.


3. பின்னும அரவத்தால்: 

எம்பெருமான் திருமேனியில் அணிந்துள்ள பாம்புகள் பின்னுவதால் எம்பெருமான் போன்று இசைந்த பொங்கு மடு.

பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையால் பொங்கும் மடு.

4. தங்கண் மலம் கழுவார் வந்து சார்தலினால்:

தங்களுடைய உடம்பு அழுக்கை(மலம்) கழுவ வந்து சேர்பவர்களினால் இசைந்த பொங்கு மடு.

தங்களுடைய ஆணவம் முதலிய மலங்களை நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய எங்கோனும் எங்கள்பிராட்டியும் போன்ற  பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

நம் மன அழுக்கு நீங்க இறைவன் திருவடியே சரணம் என்பதை உணர்த்தும் அற்புதமான சிலேடைப்பாடல். மும்மல கலப்பினால் தூங்குகின்ற ஜீவான்மா விழித்து எழுந்து  மலம் நீங்கி சிவனுடன் இணைவதே  பாவை நோன்பின் தாத்பரியம்.

Labels: , , ,

Thursday, December 27, 2007

திருவெம்பாவை # 12


திருசிற்றம்பலம்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!............(12)


பொருள்:
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில் பொன்னின் செய் மண்டபத்துள்ளே தனது இடக் கரத்திலே அனலை ஏந்தி சிவானந்த வல்லியுடன் நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்றான் எம்பெருமான், நமக்கு ஆனந்த நடராசனாக சிவகாமியம்மையுடன் அருட்காட்சி தருகின்றார்.

 நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய (மொய்யார்) தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார்.

இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தையும் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். (ஐந்தொழிலும் ஐயனின் விளையாட்டே).

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரிலும் நாம் மார்கழி நீராடுவோமாக! (இறைவனின் பொற் திருவடிகளை அடைவோமாக)

திருசிற்றம்பலம்

Labels: , , ,

Wednesday, December 26, 2007

திருவெம்பாவை # 11


திருச்சிற்றம்பலம்



                                                               உத்தரகோச  மங்கை மரகத நடராசர்



மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழற் போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்!...........(11)




பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களைம் உடையவனே!

உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய மலையரசன் பொற்பாவை  உமையம்மையின் மணவாளனே!

ஐயனே!வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் "முகேர்"(முழுகீர்) என்று குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து , வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். ( சுனை நீராடுதல் இங்கே எம்பெருமானின் திருப் பாதங்களில் சரணடைவதைக் குறிக்கின்றது நாம் எல்லோரும் சென்றும் சரணடையும் தீர்த்தனாக எம்பெருமான் விளங்குகின்றான்.  )

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம்.எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!



திருச்சிற்றம்பலம்

Labels: , ,

Tuesday, December 25, 2007

திருவெம்பாவை # 10


திருசிற்றம்பலம்








பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!..................(10)


பொருள்:

சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!

அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.

அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.

அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

திருசிற்றம்பலம்



Labels: , ,

Monday, December 24, 2007

திருவெம்பாவை # 9


திருசிற்றம்பலம்






முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)



பொருள்: ( பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடுகின்றனர். )

இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.


உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.



எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!

பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல். 



திருசிற்றம்பலம்

Labels: , ,

Sunday, December 23, 2007

திருவெம்பாவை # 8


திருச்சிற்றம்பலம்






திருவெம்பாவை # 8




கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்! ......(8 )


பொருள்: நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் "தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.

அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழி காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!


காலைக்காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் பதிகம். எம்பெருமான் ஏழைப் பங்காளன் என்று கூறும் பாடல்.

Labels: , ,

Saturday, December 22, 2007

திருவெம்பாவை # 7

 

திருசிற்றம்பலம் 




அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா! என் னாமுன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசே லோர் எம்பாவாய் .........(7)


பொருள்:பெண்ணே! நாங்கள் இது வரையும் கூறியவை கொஞ்சமோ? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன்.

விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே "சிவா", "சிவா" என்று வாய் திறப்பாயே. "தென்னா" என்று( தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகுவாயே! அத்தகைய உனக்கு என்ன நேர்ந்தது? இன்னும் விளையாடுகின்றாயா?

நாங்கள் எல்லோரும் சேர்ந்தும் தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல வாளா கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே!

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Labels: , ,

Friday, December 21, 2007

திருவெம்பாவை # 6

 
திருசிற்றம்பலம் 



மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!



பொருள் : மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! " நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?


தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவுவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெலக என்று மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

Labels: ,

திருவெம்பாவை # 5


திருசிற்றம்பலம்





மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)

பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!


இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.

எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை     மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம்  என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள்  விளக்குகின்றார். 

Labels: , ,

திருவெம்பாவை # 4

திருசிற்றம்பலம்




திருவெம்பாவை #4


ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்! ........(4)

எழுப்புபவள்:
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்:
கிளி போல மிழற்றும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து உள்ளம் உடைந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு.

Labels: , , ,

Wednesday, December 19, 2007

திருவெம்பாவை # 3

திருசிற்றம்பலம்



திருவெம்பாவை # 3


முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ......(3)

பொருள்:

எழுப்புபவள்:முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன்பாக எழுந்து எங்கள் எதிரே வந்து " என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய். இனியும் படுக்கையில் கிடப்பதேன். எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

உள்ளே இருப்பவள்:நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமையை பெற்றவர்கள். நானோ புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?



எழுப்புபவள்:உன்னுடைய அன்புடைமை எங்களுக்கு தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம்முடைய சிவபெருமானைப் பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள் எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

Labels: , , ,

திருவெம்பாவை # 2

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2)

பொருள்:

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே அரிவையே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையின் எப்போது வைத்தாய் கண்மணி?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, தாங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள், ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்த கூத்தன். நாம் யார்? அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Labels: , ,

திருவெம்பாவை # 1

திருசிற்றம்பலம்

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவை
திருவண்ணாமலையில் அருளியது
(சக்தியை வியந்தது)


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம். ஒரு ஜீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு ஜீவாத்மாவை இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

பொருள்: திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும்( ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என்று) பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற , வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

அண்ணாமலையார் மகிமை:
தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந்தெய்வங்களூம் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்க பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர். உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து பெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய் து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.

பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்பரம் யாம்
பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ

என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷ’களும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்க்கு வருவதாக ஐதீகம்.

குறிப்பு: இந்த இடுகைகள் சென்ற வருடம் இடப்பட்டன. மார்கழி மாதம் என்பதால் மீண்டும் இடப்படுகின்றன சென்ற வருடம் அனுபவிக்காதவர்களின் நன்மைக்காக.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Labels: , ,

Friday, December 14, 2007

மாணிக்கவாசகர்

திருசிற்றம்பலம்

மாணிக்க வாசகர் வரலாறு

குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி

தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.



இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.



பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். "தென்னவன் பிரம்மராயர்" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.


ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.


மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தர்"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால்  முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும்  விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.



மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார்.

 ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை


நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே


தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்


ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" வள்ளலார் சுவாமிகள்



நாளை முதல் முதலில் திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் அடுத்து திருபள்ளியெழுச்சியின் பத்து பாடல்களையும்  பொருளுடன் பார்ப்போம்.

Labels: , , ,