THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Thursday, January 10, 2008

திருப்பள்ளியெழுச்சி # 6

 
திருசிற்றம்பலம்



பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!........(6)



அணங்கின் மணவாளா பள்ளியெழுந்தருள்


பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பதிகம்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home