THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Sunday, December 30, 2007

திருவெம்பாவை # 15



திருச்சிற்றம்பலம்



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(15)


பொருள்:கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வணங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home