THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Tuesday, January 08, 2008

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே
!

பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழந்தருள்க.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home