திருவெம்பாவை # 20
உ
திருசிற்றம்பலம்

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிக்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! ..........(20)
பொருள்: திருவெம்பாவையின் துவக்கத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி என்றருளிய மாணிக்க வாசகர், முடிவில் அப்பெருஞ்சோதி ஐந்தொழில் புரியும் பொருட்டு திருவுள்ளங் கொண்டருளும் பொருட்டு ஆதியாயிற்று. ஐந்தொழில் செய்து முடித்ததில் அந்தமாயிற்று. முதலும் முடிவும் முழுமுதற்பொருட்கு முதலும் முடிவும் நேர்கின்றன. ஐந்தொழில் புரிவதால் அத்தகைய ஆதியும் அந்தமும் எம்பெருமானது திருவடிகளே.
அந்த திருவடிகள் நம்மை காத்தருள்க. தோற்றம்(படைப்பு), போகம்(காப்பு),ஈறு(அழிப்பு), காணாமை(மறைப்பு), ஆட்கொண்டருளல்(அருளல்) என்னும் ஐந்தொழில்களும் அனைத்து உயிர்களுக்கும் பொது, ஐந்தொழில்களும் திருவடிகளே செய்யும். காணாமை அடி முடி தேடிய வரலாற்றால் குறிப்பித்தது உய்தல் எல்லாவுயிரொடும் எமக்கும் உரித்து.
முதல் ஏழு அடிகளிலும் திருவடிகள் காத்தல் வேண்டும் என்றபடி ஈற்றடியில் பொங்கு மடுவாக விளங்கும் தேவ தேவனின் திருவடிகளில் சேர வேண்டும் என்ற மார்கழி நீராடல் என்ற "தொல் வழக்கம்" கூறப்பட்டது.
(பாவை நோன்பின் நோக்கம் அந்த எம்பெருமானின் தாள் அணைவதற்கே என்பதை உணர்க)
திருச்சிற்றம்பலம்
நடராச பெருமானது உருவத்தில் தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊற்றும் மலர்பதத்தே உற்ற திரோதம், முத்தி நான்ற மலர் பதத்தே நாடு. இவ்வுண்மை விளக்குத் திருவெண்பாவிற் திருக்கரங்கள் முத்தொழிலுக்கு இடமாக கூறப்படினும், இத்திருவாசகம் உணர்த்தும் உண்மை திருவடிகளேயாகக் கொள்க. அருவம் அருவுருவம் உருவம் மூன்றும் கடந்த ஞான சொரூபத்தில் எவ்வுறுப்பும் ஞானபாவனையாகத்தாம் அமையும்; உண்மையில் உருவமில்லை. ஞானமே அம்பலம் ஆனந்தமே திருக்கூத்து
திருச்சிற்றம்பலம்
இத்துடன் திருவெம்பாவை நிறைவுற்றது இனி திருப்பள்ளியெழுச்சிப் பதிகங்களைக் காண்போம்.
மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm இங்கு செல்லவும்.
மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm இங்கு செல்லவும்.
Labels: ஐந்தொழில், திருவடிகள், திருவெம்பாவை, மாணிக்க வாசகர்
3 Comments:
At 10:27 PM ,
தமிழ்பயணி said...
அன்பின் திரு.முருகானந்தம் தங்களை தொடர்புக் கொள்ள மின்னஞ்சல் முகவரி தர இயலுமா..? tamilpayani@gmail.com எனற முகவரிக்கு அனுப்பினால் போதும்.
(இந்த பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் நீக்கி விடலாம்.)
At 9:51 PM ,
Prakasananda said...
good presentation
heramba27@yahoo.co.in
At 8:21 AM ,
S.Muruganandam said...
Thank you, Prakasananda
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home